வாழைக்காய் அப்பளம்

தேவையான பொருட்கள்
வாழைக்காய் – ஐந்து
உப்பு – ருசிக்கேற்ப
பச்சைமிளகாய் – 5 முதல் 6
சீரகம் – இரண்டு ஸ்பூன்
இஞ்சி – ஒரு புளிக்கொட்டை அளவிற்கு
புளி – இரண்டு சிட்டிகை
செய்யும் முறை:
வாழைக்காயை தோலுடன் சேர்த்து அறையாக அறுத்து கொண்டு ஆவியில் வேக வைத்துக்கொள்ளவும். இதற்கு குக்கரை பயன்படுத்தலாம் . அல்லது இட்லி தட்டில் வைத்தும் வேக வைக்கலாம். வெந்த வாழைக்காயை ஆற விடவும். பின்னர் அதன் தோலை உரித்து விடவும். வெந்த பின்னர் தோல் மிக எளிதாக வந்து விடும். பின்னர் வாழைக்காய், உப்பு , சீரகம் , இஞ்சி , பச்சைமிளகாய் , சேர்த்து கலந்து கொள்ளவும். நீளமான வாழைக்காயாய் இருந்தால் மிக்ஸியில் அரைப்பது கடினம் . அதனால் வாழைக்காயை சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டால் மிக்ஸியில் அரைப்பது எளிது. மிக்ஸ்யில் அரைக்கும் போது சிறிதளவு நீர் சேர்த்துகொள்ளவும். இப்படி அரைக்கும் கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும். தேவையெனில் ருசிக்காக சிறிது புளியையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் வாழைக்கையிலேயே புளி இருப்பதால் புதிதாக புளி சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. ருப்பிய கலவையை சிறு சிறு அப்பளம் வடிவில் ஒரு பிளாஸ்டிக் கவர் மீது ஊற்றி இரண்டு அல்லது மூன்று தினங்கள் வெய்யிலில் உலர விடவும். வாழைக்காய் அப்பளம் சற்று தடியாகவே இருக்கும். தரட்டும் அப்பளத்தை விட ஊற்றும் அப்பளம் செய்யவும் எளிதானது. இப்படி மூன்று தினங்கள் காய வைத்த அப்பளத்தை இரண்டு மாதங்கள் வரை வைத்திருக்கலாம். இந்த அப்பளத்தை சூடான எண்ணையில் வறுத்தெடுத்தால் உணவுக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். ஐந்து வாழைக்காயில் 25 அப்பளங்கள் வரை செய்யலாம். இன்னும் என்ன தயக்கம் .. இந்த வெயில் காலம் முடிவதற்குள்ளாக புதுவகை வாழைக்காய் அப்பளத்தை முயற்சித்து பாருங்களேன்.