விகே பாண்டியன் பிஜு ஜனதாதளத்தில் இணைந்தார்

புவனேஸ்வர், நவ. 27- ஒடிஷா முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான தமிழ்நாட்டை சேர்ந்த விகே பாண்டியன் முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் இன்று பிஜூ ஜனதா தளம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். பிஜூ ஜனதா தளத்தில் இணைந்த விகே பாண்டியன் விரைவில் அம்மாநில துணை முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் ஐ.ஏ.எஸ், ஒடிஷா மாநில அரசிலும் அரசியலிலும் கடந்த பல ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்றுள்ளார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனி செயலாளராகவும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் முதன்மை அதிகார மையமாகவும் விஸ்வரூபம் எடுத்தார் விகே பாண்டியன். 2018-ம் ஆண்டு விகே பாண்டியன், அவரது மனைவி சுஜாதா கார்த்திகேயன் உள்ளிட்ட சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதால் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பாஜக விகே பாண்டியன் வீடு மீது தாக்குதலும் நடத்தியது. ஆனாலும் ஒடிஷா அரசு, பிஜூ ஜனதா தளம் கட்சியில் விகே பாண்டியன் கை ஓங்கியே இருந்தது. அண்மையில் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் முதன்மை செயலாளராக பதவி வகித்த நிலையில் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தார் விகே பாண்டியன். அதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்திருந்தது. இதன் பின்னர் அதாவது விகே பாண்டியன் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே, கேபினட் அமைச்சர் அந்தஸ்து பதவி வழங்கப்பட்டது. ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தள அரசின் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக் கூடிய 5T திட்டம்,நபின் ஒடிஷா தலைவராக விகே பாண்டியன் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜூ ஜனதா தளம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் விகே பாண்டியன். ஆட்சி, கட்சி இரண்டிலும் அதிகாரப்பூர்வமான இடங்களைப் பெற்றுவிட்ட விகே பாண்டியன் விரைவில் ஒடிஷா மாநில துணை முதல்வராக அறிவிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.