விசாகத்திருவிழா லட்சக்கணக்கானபக்தர்கள் சுவாமி தரிசனம்

வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (மே.22) அதிகாலை முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, திருச்செந்தூரில் வசந்த விழாவாக கடந்த 13-ம் தேதி தொடங்கியது. விழாவின் 10-ம் நாளான இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10:30 மணியளவில் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.