விசாரணைக்கு ஆஜராக தேவராஜகவுடாவுக்கு எஸ்ஐடி அழைப்பு

பெங்களூரு, மே 9: எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான சில ஆவணங்களை வெளிப்படையாக வெளியிட்ட பாஜக தலைவரும் வழக்கறிஞருமான தேவராஜகவுடா மற்றொரு சிக்கலைச் சந்திக்கிறார். அவரை விசாரணைக்கு ஆஜராக சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) மீண்டும் நோட்டீஸ் கொடுத்திருப்பது தேவராஜகவுடாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் கவுடாவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தேவராஜகவுடா சமீபத்தில் சில ஆவணங்களை வெளியிட்டு ஊடகங்கள் முன் சிலர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து தேவராஜ் கவுடாவுக்கு எஸ்ஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவரிடம் உள்ள கூடுதல் ஆதாரங்கள், புகைப்படங்கள், ஆடியோ ஆகியவற்றை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம், வழக்கு தொடர்பான விசாரணைக்கு பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக் கவுடாவுக்கு நோட்டீஸ் வழங்க‌ப்பட்டது. எனவே, இருவரிடமும் எஸ்ஐடி மீண்டும் தீவிர விசாரணை நடத்தவுள்ளது.
நகரில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேவராஜகவுடா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார்தான் இந்த வழக்கின் மூளையாக செயல்பட்டார் என்று கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு டி.கே.சிவகுமாரை அழைத்தார். பிரஜ்வால் முன்னாள் கார் டிரைவர் கார்த்திக், டி.கே.சிவக்குமார் தன்னை சந்தித்து நடத்திய‌ உரையாடல் ஆடியோவை தேவராஜகவுடா வெளியிட்டிருந்தார். அதேபோல், எஸ்ஐடி குழு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், அதுவும் இது குறித்து புகார் அளிக்க உள்ளது.இதனிடையே, பிரஜ்வால் பென் டிரைவ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. பிரஜ்வலின் முன்னாள் டிரைவர் கார்த்திக் கவுடா, புட்டராஜு, நவீன், சேத்தன் ஆகியோரின் முன்ஜாமீன் மனுவை ஹாசன் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.