விஜயகாந்த் பள்ளி ஆசிரியர் பேட்டி

தேவகோட்டை: டிச.29-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி 6, 7-ம் வகுப்புகளில் பயின்றார் விஜயகாந்த்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் பிரைட் கூறியதாவது: பள்ளி வளர்ச்சிக்காக பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் விசுவநாதன், ராஜாதம்பியை சந்தித்தோம். அப்போது அவர்கள் விஜயகாந்தின் ஈகை குணத்தைப் பற்றி பெருமையாகப் பேசினர். மேலும் ‘‘அவர் படிக்கும்போது அதிக தின்பண்டங்களை கொண்டுவருவார். ஆனால், அவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுவார்’’ என்றனர்.
2003-ல் விஜயகாந்த் காரைக்குடிக்கு வந்தார். அப்போது அவரைச் சந்தித்து, பள்ளிக்கு வருமாறு அழைத்தோம். அவரது பயணத் திட்டத்தில் தேவகோட்டை இல்லாதபோதும், எங்களது அழைப்பை ஏற்று பள்ளிக்கு வந்தார். மாணவர்களிடம் உரையாற்றியதுடன், பள்ளி வளர்ச்சிக்காக அப்போதைய தலைமை ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியத்திடம் ரூ.1 லட்சம் வழங்கினார்.மேலும் ‘‘நான் இங்கு படிக்கும்போது ஆசிரியர் லாசர் தமிழ்ப் பாடத்தை சொல்லிக் கொடுத்த விதத்தால்தான், எனக்கு தமிழ்ப் பற்று அதிகரித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதால் எனது படிப்பு பாதிக்கப்பட்டது’’ என்று விஜயகாந்த் எங்களிடம் தெரிவித்தார். அத்தகைய மனிதநேயம் மிக்க மனிதர் மறைந்ததை எங்களது மனம் ஏற்க மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.