
சென்னை: அக்.15-
தவெக தலைவர் விஜய் 7 மணிநேரம் தாமதமாக வந்ததே நெரிசலுக்கு காரணம் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கரூர் துயர நிகழ்வில் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து வருகிறார். முதலமைச்சரை பேசவிடாமல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டதால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. முதலமைச்சரை பேசவிடாமல் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
எடப்பாடி: எதிர்க்கட்சியினர் பேசிய பிறகு முதலமைச்சர் பதில் அளிக்கலாம் என தெரிவித்தார்.
சபாநாயகர்: அரசு தரப்பிலான விளக்கத்தை தான் முதலமைச்சர் கொடுக்கிறார். முதலமைச்சர் பேசிய பிறகு உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எடப்பாடிக்கு சபாநாயகர் பதில் தெரிவித்தார். சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் ஒவ்வொருவர் சொல்லும் கருத்தையும் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முதல்வர் உரை
கரூர் கூட்ட நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்தார். கரூர் நெரிசல் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளனர். கரூர் தவெக மேற்கு மாவட்ட செயலாளர் அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பை கருதி அனுமதி தரவில்லை. பாதுகாப்பு காரணங்களால் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் பரப்புரை கூட்டத்தை நடத்த மாவட்ட செயலாளர் மனு வழங்கினார். 16 நிபந்தனைகளுடன் தவெக நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 517 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விஜய் பரப்புரையின்போது அன்றைய தினம் அதிகாரிகள், காவலர்கள் என 606 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட கூடுதலாகவே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டம் கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. 10,000 பேர் வருவார்கள் என கூறப்பட்ட நிலையில் அதைவிட அதிகம் பேர் கூடுவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டது. தவெகவால் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்தார். மாலை 3 மணி முதல் இரவு 10 வரை அனுமதி வழங்கிய நிலையில் பகல் 12 மணிக்கே விஜய் வருவார் என்ற அக்கட்சி பொதுச்செயலாளர் அறிவித்திருந்தார். கரூரில் காலை முதல் காத்திருந்த மக்களுக்கு போதிய குடிநீர், உணவு வழங்கப்படவில்லை. பிரச்சாரத்துக்கு வந்திருந்த பெண்களால் உணவு, குடிநீருக்காக வெளியில் செல்ல முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் சுமார் 17,000 வரை பங்கேற்றிருந்தனர். அதிமுக நிகழ்ச்சிக்கு நேர்மாறாக தவெக பிரச்சார நிகழ்ச்சி நடந்துள்ளது. விஜயின் கேரவன் வாகனத்தை பின் தொடர்ந்து ஏராளமானோர் வந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட பிறகும் 50 மீட்டர் தள்ளி பேசுங்கள் என்று கூறியதை தவெகவினர் ஏற்கவில்லை. பிரச்சார வாகனத்தை நிறுத்த கரூர் மாவட்ட எஸ்.பி. பலமுறை கூறியும் அதை நிறுத்தாமல் சென்றனர். காவல்துறையின் அறிவுறுத்தலை மீறி 35 மீட்டர் தூரம் வரை விஜய் வாகனம் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. கூட்டநெரிசல் ஏற்பட்ட உடன் ஜெனரேட்டர் அறைக்குள் புகுந்து தகரங்களை சேதப்படுத்தியதால் மின்சாரம் தடைபட்டது. நெரிசல் ஏற்பட்ட உடன் மீட்புப்பணி முழுவீச்சில் நடைபெற்றது. மீட்புப்பணி நடந்து கொண்டிருக்கும்போதே 2 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தவெகவினர் தாக்கினார்கள். நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்ஸும் அங்கு வரவில்லை.















