விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை எளிதில் வீழ்த்தியது மும்பை


38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இதில் ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டம் ஒன்றில் மும்பை-டெல்லி (டி பிரிவு) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி 32 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. தொடக்க வீரர்கள் ஷிகர் தவான், அனுஜ் ரவாத் இருவரும் ரன்ஏதுமின்றி ரன்-அவுட் ஆனார்கள். இதன் பிறகு ஹிமாத் சிங்கும் (106 ரன்), ஷிவாங் வஷிஷ்ட்டும் (55 ரன்) நிலைத்து நின்று போராடி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய மும்பை அணி 31.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 216 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
பிரித்வி ஷா சதமும் (105 ரன், 89 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) சூர்யகுமார் யாதவ் அரைசதமும் (50 ரன், 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 39 ரன்னில் ஆட்டமிழந்தார். இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் புதுச்சேரியை தோற்கடித்தது. இதில் புதுச்சேரி நிர்ணயித்த 274 ரன்கள் இலக்கை ராஜஸ்தான் அணி 46.1 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இன்று 9 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
இதில் இந்தூரில் தமிழ்நாடு-ஆந்திரா அணிகள் மோதும் (காலை 9 மணி) ஆட்டமும் அடங்கும்.