விடுதிக்குள் புகை பரவியதால் 4 மாணவிகள் மயக்கம்

மதுரை: நவ. 4: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி விடுதி அருகே உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 4 மாணவிகள் மயக்கம்m அடைந்தனர். தீ விபத்தால் நள்ளிரவில் மாணவிகள் விடுதியை விட்டு அவசர அவசரமாக வெளியேற முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில், இரவிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் இயங்கி வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் பெய்த மழையின்போது, பல்கலைக்கழக பெண்கள் விடுதி அருகே இருந்த மின் மாற்றியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் தீயானது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் அங்கிருந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சில விடுதி மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே தீயணைப்புத் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்கள் மூலம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மழை என்பதால் தீ தானாகவே அணைந்தது. இந்த நிலையில் பல்கலைக்கழக மாணவிகள் விடுதி வளாகம் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. இதில் நான்கு மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அருகில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.