விண்ணை அதிரவைத்த அரோகரா சரணகோஷம்பழனி பங்குனி உத்திர திருத்தேரோட்டம்

பழனி: மார்ச் 25: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா சரணகோஷத்துடன் திருத்தேரோட்ட நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. பழனி முருகன் கோவிலில் நேற்று முன்தினம் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
பங்கு உத்திர காலத்தில் பழனி முருகன் கோவிலுக்கு கொடுமுடி உள்ளிட்ட புனிதத் தலங்களில் இருந்து காவடிகளில் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருவது வழக்கம். பழனி முருகன் கோவிலில் உள்ள சிலை நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டது. தற்போது கோடை வெயில் தாக்கம் அதிகம் என்பதால் முருகக் கடவுளை குளிர்விக்க இத்தகைய தீர்த்த காவடிகளை பக்தர்கள் எடுத்து வருவது வழக்கம்.
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடபெற்றது.

இத்திருக்கல்யாண நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் பங்கேற்றனர். பங்குனி உத்திரநாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு சண்முக நதியில் முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானை சுவாமிகள் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினர். இதனையடுத்து காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்கப்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு திருஆவினன்குடியில் தந்தப் பல்லக்கில் முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
முற்பகல் 11.30மணிக்கு வடக்கு கிரிவீதியில் முத்துக்குமாரசுவாமி- வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து பல்வேறு சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் மாலையில் திருத்தேரோட்டம் நடைபெற்றது.