
பெங்களூர் : மே. 25 – விதான சௌதா எதிரே உள்ள மெட்ரோ ஸ்டேஷன் அருகிலேயே இளம்பெண் ஒருவரை காரில் கடத்த முயற்சித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.ஆனால் அந்த இடத்தில் இருந்த கே எஸ் ஐ எஸ் எப் ஊழியர்கள் சமயோஜித புத்தியுடன் இளம் பெண்ணை காப்பாற்றியுள்ளனர். தவிர கடத்த முயன்ற இரண்டு பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சமூக நலத்துறையில் பணியாற்றிவந்த இளம் பெண் ஒருவர் வேலை முடித்து கொண்டு வீட்டுக்கு செல்ல மெட்ரோ ஸ்டேஷன் அருகில் வந்துள்ளார் . அப்போது காரில் வந்த இரண்டுபேர் இளம் பெண்ணை காரில் இழுத்துக்கொள்ள முயன்றுள்ளனர். அப்போது இளம்பெண் உதவிக்காக கூக்குரலிட்டுள்ளாள். இளம் பெண்ணின் கூக்குரல் கேட்டு அருகிலேயே நின்றுகொண்டிருந்த கர்நாடக மாநில தொழில் பாதுகாப்பு படை ஊழியர்கள் இளம் பெண்ணை காப்பாற்றியுள்ளனர். தவிர இளம் பெண்ணை காருக்குள் இழுக்க முயற்சித்த இரண்டு பேரை பிடித்துள்ளனர். பின்னர் இருவரையும் விதான சௌதா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இளம் பெண்ணின் உறவினர்களே அவரை கடத்த முயன்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தவிர இளம் பெண்ணின் தந்தை இறந்தபின்னர் கருணை அடிப்படையில் இளம் பெண்ணிற்கு வேலை கிடைத்திருப்பதால் அவருடைய உறவினர்களுக்கு பொறாமை உண்டாகி இவரை கடத்த முயன்றிருக்கக்கூடும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது . இது குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.