
பெங்களூர் : அக்டோபர் . 10 – ஆடுகோடியில் விநாயகர் ஊர்வலத்தின்போது நடமாடிக்கொண்டிருந்த இரண்டு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட கலவரத்தால் தகராறு , சண்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொண்டதில் ஒருவன் இறந்துள்ள சம்பவத்தை தீவிரமாக கருதியுள்ள நகர போலீஸ் ஆணையர் பி தயானந்த் நகரில் விநாயகர் ஊர்வலங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டாம் என நகரின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். விநாயகர் ஊர்வலங்களின்போது நகரின் பல பகுதிகளில் கலவரங்கள் நடந்துள்ளது . அல்சூர் , எடியூர் , ஆடுகோடி உட்பட பல இடங்களில் இத்தகைய கலவரங்கள் நடந்துள்ளது. தவிர ஆடுகோடி அருகில் நடந்த விநாயகர் ஊர்வலத்தின் போது நடந்த கலாட்டாவில் ஸ்ரீநிவாஸ் என்ற கொரியர் பாய் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளான் . இதனால் நகரில் இனி எந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கும் அனுமதிக்க வேண்டாம் என போலீஸ் ஆணையர் முடிவு மேற்கொண்டுள்ளார் . ஆனாலும் ஆணையரின் இந்த உத்தரவுக்கு பின்னரும் பலரும் விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கேட்டு பல மனுக்கள் போலீஸ் நிலையங்களுக்கு வந்தபடி உள்ளன. இந்த வகையில் 200கும் மேற்பட்ட மனுக்கள் போலீஸ் நிலையங்களுக்கு வந்துள்ளன. ஆனால் எக்காரணம் கொண்டும் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது என போலீசார் மிகவும் கண்டிப்பாக தெரிவித்து வருகின்றனர். விநாயகர் பண்டிகை முடிந்து பல நாட்கள் ஆகியும் இன்னும் பல பகுதிகளிலும் விநாயகரை நிறுவி ஊர்வலம் நடத்தி வருகின்றனர். போலீசாரின் தகவல்கள்படி நகரில் இன்னமும் 450 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளது . இந்த நிலையில் பலரும் ஊர்வலம் மற்றும் டி ஜெ ஒளிபரப்பிற்கு அனுமதி கேட்டு மனு அளித்து வருகின்றனர். ஊர்வலங்கள் போது சமீபத்தில் நடந்துள்ள கலவரங்கள் மற்றும் கொலை காரணத்தால் போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். அப்படியும் ஊர்வலங்கள் நடந்து ஏதாகியலும் கலாட்டா , கலவரம் மற்றும் கொலைகள் நடந்தால் சம்மந்தப்பட்ட சரக போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் நகர போலீஸ் ஆணையர் எச்சரித்துள்ளார்.