விபத்து: கிராமிய கலைஞர் பலி

மண்டியா : ஜனவரி. 9 – இந்த மாவட்டத்தின் சிக்கமண்டியா கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டு வண்டிகள் ஓட்டும் போட்டியில் பார்வையாளர்கள் பக்கமாக மாட்டு வண்டி திரும்பி அதன் அடியில் சிக்கிய விவசாயி ஒருவர் அதே இடத்தில் இறந்திருப்பதுடன் ஒரு சிறுவனும் படுகாயமடைந்துள்ளான். கோலார் நகரை சேர்ந்த கிராமீய கலைஞர் மற்றும் விவசாயிகள் சங்க செயலாளருமான நாகராஜு (55) என்பவர் இந்த விபத்தில் உயிரிழந்தவர். தவிர ஹுலிவானா கிராமத்தை சேர்ந்த ருத்விக் (10) என்ற சிறுவனின் இதய பகுதியில் தீவிர காயம் ஏற்பட்டு தற்போது அவன் நகரின் விம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான் . ஹல்லிகேஸ்வர போரேஸ்வரா மற்றும் விவசாயிகள் நண்பர்கள் குழு சார்பில் சிக்கமாண்டியா கிராமத்தின் அருகில் எட்டாவது ஆண்டு மாநில அளவிலான இரட்டை மாட்டு வண்டிகள் ஓட்டும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாநிலத்தின் பல பகுதிகளிலுமிருந்து 84 குழுக்கள் பங்கு பெற்றிருந்தன. இரண்டு தினங்களுக்கு முன்னர் போட்டிகள் துவங்கிய நிலையில் நேற்று இறுதி சுற்று பந்தயம் நடைபெற்றது இந்த போட்டிகளை காண சுற்று பகுதி கிராமத்தினர் பெருமளவில் வந்திருந்தனர். ஒரு பக்கத்திலிருந்து துவங்கிய மாட்டு வண்டிகள் ஓட்டும் போட்டி மற்றொரு முனையை நெருங்கிக்கொண்டிருந்தது . அப்போது ஜோடி காளை மாட்டு வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கடைசி முனையை தாண்டிய பின்னரும் எதிரில் நின்றிருந்த பொதுமக்களுக்கு இடையில் நுழைந்துள்ளது. இதனால் மக்கள் சிதறி அடித்து கொண்டு ஓடினர். போட்டியை பார்த்துக்கொண்டிருந்த நாகராஜுக்கு வண்டியின் முன் பகுதி மோதியதால் அவர் கீழே விழுந்துள்ளார். அப்போது வண்டியின் சக்கரங்கள் அவர் மீது எறியதில் நாகராஜு அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். தவிர கீழே விழுந்த இன்னொரு சிறுவன் ருத்விக் கால் மிதிகளுக்கு அடிபட்டு காயமடைந்துள்ளார். உடனே சிறுவனை விம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . இந்த விபத்துகள் குறித்து மண்டியா சென்ட்ரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.