விபத்து : 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

ஹைதராபாத்: மார்ச் 4:
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்ற கார் மரத்தில் மோதியதில் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் இருந்து அப்துல் ரகுமான் குடும்பத்தினர் சிறு குழந்தைகள் உட்பட 12 பேருடன் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டனர். இவர்கள் கார் இன்று அதிகாலை 3 மணியளவில் வனபர்த்தி மாவட்டம் கொச்சக்கோட்டா என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, கார் ஓட்டுனரின் தூக்க கலக்கத்தின் காரணமாக சாலையின் தடுப்பில் உள்ள டிவைடரில் மோதி கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.
இதில் காரின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில், காரில் பயணித்த அப்துல் ரகுமான், 3 குழந்தைகள் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர், கர்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மரத்தில் மோதி குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.