விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு

நாமக்கல்: பிப்ரவரி. 28 – பரமத்தி வேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் திருச்செங்கோட்டை சேர்ந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிழந்தனர். படுகாயமடைந்த 4 வயது பெண் குழந்தை, கார் ஓட்டுநர் ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள மோர்பாளையம், பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநர் ரவி. அவரது மனைவி கவிதா உறவினர்கள் மணி என்கிற கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி என்கிற சுதா, சாந்தி மற்றும் கவிதாவின் தம்பி மகள் லக்‌ஷனா(4) ஆகியோர் கரூரை அடுத்த வீரப்பூரில் நடைபெற்ற கோயில் திருவிழாவிற்கு காரில் சென்றனர். காரை ரவி ஓட்டிச் சென்றுள்ளார்.
பின், அனைவரும் நள்ளிரவு திருச்செங்கோடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சேலம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்தபோது எதிரே சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி பின்புறம் எதிர்பாராத விதமாக கார் பயங்கர வேகமாக மோதி விபத்தில் சிக்கியது.
விபத்தில் காரில் இருந்த மணி (எ) கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கார் ஓட்டுநர் ரவி, அவரது மனைவி கவிதா, நான்கு வயது பெண் குழந்தை லக்‌ஷனா ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் மருத்துவமனை செல்லும் வழியிலேயே கவிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
நான்கு வயது குழந்தை லக்ஷனா கார் ஓட்டுநர் ரவி ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.