
சென்னை: நவம்பர் 27-
டெல்லியில் இருந்து திருச்சிக்கு சென்ற விமானத்தில் மயக்கமடைந்த பெண்ணுக்கு 2 இளம் சித்த மருத்துவர்கள் வர்ம சிகிச்சை அளித்து குணப்படுத்தினர்.டெல்லியில் இருந்து திருச்சிக்கு கடந்த 22-ம் தேதி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். விமானத்தில் கழிப்பறைக்குச் செல்ல முயன்றபோது, அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
விமான பணிப்பெண்கள் அவரை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க முயன்றனர். அது பலனளிக்காததால் விமானத்தில் மருத்துவர்கள் யாராவது உள்ளனரா என்று அவர்கள் உதவி கேட்டனர்.
அப்போது விமானத்தில் இருந்த, எம்.டி. சித்தா படிப்பை நிறைவு செய்த க.இளவரசன் மற்றும் இளநிலை சித்த மருத்துவ அறிவியல் பட்டம் பெற்ற ச.கவுதம் ஆகிய சித்த மருத்துவர்கள், உடனடியாக ‘கவுளி அடங்கல்’ மற்றும் ‘செவிக்குற்றி புள்ளி’ ஆகிய வர்ம சிகிச்சைகளை, அந்த பெண்ணுக்கு அளித்துள்ளனர்.இதையடுத்து, அந்த பெண் மயக்கம் தெளிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினார். மருத்துவர்களின் இந்த சிகிச்சைக்கு விமானத்தில் இருந்தவர்களும், விமான சேவை நிறுவனத்தினரும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.அலோபதி மருத்துவத்தை போல், சித்த வர்ம சிகிச்சைகளும் அசாதாரண சூழல்களில் உயிர் காக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.















