விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்பு தலை

பெர்லின் , ஜூலை 27 –
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அப்படி இருக்கையில் விமானத்தில் உணவு உண்ணும் போது உங்கள் தட்டில் பாம்பு இருப்பதை கண்டால் உங்களின் கதி என்னவாகும். அப்படி ஒரு சம்பவம்தான் ஜெர்மனி செல்லும் விமானத்தில் நிகழ்ந்துள்ளது. துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனியின் டஸ்சல்டார்வ் நகரை நோக்கி சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது விமான பணிப்பெண்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அவர்களில் ஒரு விமான பணிப்பெண் தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட தொடங்கிய சில நிமிடங்களில் உணவில் காய்கறிகளுக்கு நடுவே பாம்பின் தலை கிடந்ததை கண்டு அதிர்ந்துபோனார். உடனடியாக அவர் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து டுவிட்டரில் பகிர்ந்தார். இதனால் சிறிது நேரத்திலேயே இந்த விவகாரம் பூதாகரமானது. அதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்த சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் இந்த சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது.