விமானம் புறப்படுவதற்கு முன்வெடி குண்டு மிரட்டல் : ஒருவன் கைது

பெங்களூர் : ஜனவரி. 30 – விமானம் புறப்பட சிலவே வினாடிகள் இருந்த நிலையில் பையில் வெடிகுண்டு இருப்பதாக குழப்பத்தை ஏற்படுத்திய ஒருவனை தேவனஹள்ளி சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 28 அன்று மாலை 5.25 க்கு விமானம் புறப்படவிருந்த நிலையில் பையில் வெடிகுண்டு இருப்பதாக தனியார் நிறுவன ஊழியன் சஜூ கே குமார் (48) என்பவனை போலீசார் கைது செய்துள்ளனர் . பின்னர் இவனிடம் கூடுதல் விசாரணை நடந்து வருகிறது. விமான நிலையத்தின் இரண்டாவது தடத்தில் பெங்களூரிலிருந்து கொச்சிக்கிக்கு புறப்படவிருந்த ஏர் இந்தியா விரைவு விமானத்தில் இருந்த பயணி சஜூ குமார் விமானம் புறப்பட சிலவே கணங்கள் இருந்த நிலையில் பையில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளான். பின்னர் இவனுடைய பையை சோதிக்கவும் விமான ஊழியர்களுக்கு அனுமதி தராததால் உடனே அவனை கீழே இறக்கி மத்திய தொழில் பகுதி பாதுகாப்பு படை ஊழியர்களிடம் ஒப்படைத்து சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவனை விமான நிலைய போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அவனுக்கு எதிராக இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 505ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவு பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் சட்ட பிரிவாகும் இதில் இவனுடைய குற்றம் நிருபிக்கப்பட்டால் மூன்றாண்டுகள் சிறை , அபராதம் அல்லது இரண்டும் விதிக்கக்கூடும். இப்போது இவனை தீவிரமாக விசாரிக்க நீதி மன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றவாளி குமாரன் திருச்சூருக்கு செல்ல கொச்சி விமானத்தில் ஏறியுள்ளான் . குற்றவாளி குமாரன் சகோதரியின் குழந்தை பிறந்த உடனேயே இறந்துள்ளது. இதனால் அவசர அவசரமாக குற்றவாளி விமானத்தில் செல்ல முடிவு செய்துள்ளான். சோதனைகள் முடிந்து விமானத்தில் ஏறி உட்கார்ந்த பின்னரும் விமானத்திற்குள் நடந்த கூடுதல் சோதனைகளால் அவன் ஆத்திரமடைந்துள்ளான் . இதனால் நான் என்ன வெடிகுண்டு அல்லது கத்தி வைத்திருக்கிறேன் என சந்தேகிக்கிறீர்களா என சோதனை ஊழியர்களிடம் கேட்டுள்ளான். பச்சிளம் குழந்தை இறந்ததற்கான ஆதாரத்தை குமாரன் நிரூபத்தால் வெறும் அபராததுடன் அவன் விடுதலை ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.