விமானம் புறப்படுவதற்கு விமானிக்கு மாரடைப்பு – பலி

மும்பை, ஆகஸ்ட் 18-
நாக்பூர்-புனே இடையே விமானம் புறப்பட்டுச் செல்லும் சில நிமிடங்களுக்கு முன் தமிழகத்தைச் சேர்ந்த விமானி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
40 வயதான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் புனேவுக்கு புறப்படுவதற்கு முன் நாக்பூர் விமான நிலையத்தில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்த விமானி மனோஜ் சுப்ரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விமான நிலையத்தின் பாதுகாப்புப் பகுதியில் காத்திருந்த விமானி, மதியம் 1 மணிக்கு நாக்பூரில் இருந்து புனே செல்லும் விமானத்தை எடுத்துச் செல்லவிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நண்பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகளில் இருதயநோய் நிபுணர் ஒருவர் விமானியை பரிசோதித்து, அவர் சுவாசிக்கவில்லை என்றார்.
உயிரிழந்த விமானி சென்னையை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.‌விமானிக்கு சிபிஆர் உட்பட எந்த முதலுதவிக்கும் பதிலளிக்கவில்லை, உடனடியாக கிம்ஸ் கிங்ஸ்வே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,
இண்டிகோ ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் விமானி ஒருவர் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. சுப்ரமணியம் விமான நிலையத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
விமானத்தில் 214 பேர் இருந்தனர், இந்த சம்பவத்தால் விமானம் 14 நிமிடங்கள் தாமதமானது.நாக்பூர் விமான நிலையத்தில் இதுபோன்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். ஆகஸ்ட் 2021 இல், பிமன் பங்களாதேஷ் ஏர்லைன்ஸின் விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது மற்றும் மஸ்கட்டில் இருந்து டாக்கா செல்லும் விமானத்தில் நாக்பூரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது விமானி உயிரிழந்தார்.