
பெங்களூரு, செப். 5- கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு வந்த இண்டிகோ விமானத்தின் கழிவறையில் பீடி புகைத்த பயணி கைது செய்யப்பட்டார்.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இவர் கைது செய்யப்பட்டு, விமானச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலைய காவல் நிலையத்தில் பொது பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக பிரிவு 336 மற்றும் விமான விதிகள், 1937 இன் பிரிவு 25 (3பி) இன் கீழ் விமானத்திற்குள் புகைபிடிக்கக்கூடாது என்ற விதிகளை மீறியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து செப்டம்பர் 3ஆம் தேதி இரவு 9.11 மணிக்கு புறப்பட்ட விமானத்தின் 24ஏ இருக்கையில் ஜி கருணாகரன் என்பவர் அமர்ந்திருந்தார். கொல்கத்தாவில் இருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் பின்பகுதியில் எரியும் துர்நாற்றம் வீசியது.
கழிவறையில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரிந்தது.
உடனடியாக கழிவறை கதவு தட்டப்பட்டது நீண்ட நேரம் தட்டிய பிறகு அது திறக்கப்பட்டது உள்ளே பீடி புகைத்த படி கருணாகரன் இருந்தார். இதைப் பார்த்து விமான சிப்பந்திகள் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக விமானிக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர், விமானம் பெங்களூர் விமான நிலையம் சென்றடைந்தவுடன், அந்த நபர் விமான நிலைய காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.