விமான நிலையத்தை வீடாக்கி வாழ்ந்தவர் மரணம்

பாரீஸ் , நவ- 14
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் மெர்ஹான் கரீமி நாசேரி (வயது 77). இவர் தனது தாயைத்தேடி ஐரோப்பாவுக்கு பறந்தார். அங்கே பெல்ஜியம், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி என பல நாடுகளுக்கும் சென்றார். ஆனால் முறையான குடியேற்ற ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அந்த நாடுகளில் இருந்தெல்லாம் அவர் வெளியேற்றப்பட்டார். கடைசியில், 1988-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீசில் உள்ள விமான நிலையத்துக்கு வந்திறங்கினார். அந்த விமான நிலையத்தின் ‘2எப்’ முனையத்தில் ஒரு பகுதியை தனது வீடாக்கினார். அவர் தனது உடைகள் உள்ளிட்ட உடைமைகளை தள்ளுவண்டி ஒன்றில் வைத்திருந்தார். அவர் தனது வாழ்க்கையை நோட்டுப்புத்தகத்தில் எழுதுவதிலும், புத்தகங்கள், நாளேடுகளை வாசிப்பதிலும் கழித்தார். அவரது வாழ்க்கைக் கதை, உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் சினிமா இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை கவர்ந்தது. அவர் நாசேரியின் வாழ்க்கையை ஹாங்ஸ், கேதரின் ஜீட்டா ஜோன்ஸ் நடிப்பில் ‘தி டெர்மினல்’ என்ற பெயரில் சினிமாவாக எடுத்தார். அந்த படம் வெளியானதும் அவரைப் பேட்டி காண பத்திரிகையாளர்கள் குவிந்தனர். தன்னை சர் ஆல்பிரட் என்று அழைத்துக்கொண்ட அவர் ஒரே நாளில் 6 பேட்டிகளை அளித்து புகழ் பெற்றார்.
1999-ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்தினை பிரான்ஸ் அரசு வழங்கியது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் 2006-ம் ஆண்டு வரை வாழ்ந்தார். அதன் பின்னர் உடல்நல குறைவால் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். குணம் அடைந்ததையடுத்து ‘தி டெர்மினல்’ படத்தின் சன்மானமாக கிடைத்த பணத்தைக் கொண்டு அங்குள்ள விடுதியில் தங்கி வாழத்தொடங்கினார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பாக அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, தான் வாழ்ந்த விமான நிலையத்துக்கே திரும்பினார். அங்கு அவர் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இது பாரீஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.