விராட் கோலி சொன்ன யோசனை எனக்கு உதவியது: ஹர்திக்

டிரினிடாட்: முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி சொன்ன யோசனை தனக்கு பெரிதும் உதவியதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் (1-0), ஒருநாள் (2-1) என இந்தியா தொடரை வென்றுள்ளது. நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது.
“இந்த வெற்றி ரொம்பவே ஸ்பெஷல். இது போன்ற ஆட்டத்தை தான் எதிர்பார்க்கிறேன். இந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவி இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிவோம். சக வீரர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அணியின் அங்கமாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா உள்ளனர். இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டியது அவசியம்.அவர்கள் ஆடும் லெவனில் இல்லாத காரணத்தால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. களத்தில் சிறிது நேரம் இருக்க விரும்பினேன். போட்டிக்கு முன்னர் விராட் கோலி உடன் அது குறித்து உரையாடினேன். அவர் சொன்ன யோசனை எனக்கு இந்தப் போட்டியில் பெரிதும் கைகொடுத்தது” என பாண்டியா தெரிவித்திருந்தார்.

இந்தப் போட்டியில் 52 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார் பாண்டியா. 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும். கடைசி ஓவரில் 6, 0, 4, 6, 0, 2 என ரன்கள் குவித்திருந்தார். நாளை தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் விளையாட உள்ளன.