விரும்பியவரை மணந்த மகளை சுட்டுக்கொன்ற தந்தை

புதுடெல்லி,நவ. 22 – டெல்லி தலைநகரப் பகுதியை ஆக்ரா நகருடன் யமுனா விரைவுச்சாலை இணைக்கிறது. இந்த விரைவுச்சாலையில் மதுரா அருகே ஒரு பெரிய சூட்கேசில் இளம்பெண் ஒருவரின் உடல் காயங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. அவர் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கினர். 14 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொல்லப்பட்டு கிடந்த பெண்ணின் உத்தேச வயதை ஒட்டிய, டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சமீபத்தில் காணாமல் போன பெண்களின் பட்டியல் திரட்டப்பட்டு விசாரிக்கப்பட்டது.
அதில் அந்தப் பெண், தெற்கு டெல்லி பாதார்பூர் பகுதியைச் சேர்ந்த நிதேஷ் யாதவ்-பிரஜ்பாலா தம்பதியின் மகள் ஆயுஷி யாதவ் (வயது 22) என தெரியவந்தது. அவரது உடலை அடையாளம் காட்ட வரும்படி நிதேஷை போலீசார் அழைத்தனர். அப்போது, மகள் காணாமல்போனது குறித்து நிதேஷ் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் போலீசார் மேலும் துருவித் துருவி விசாரித்தபோது, பெற்ற மகளை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். பெற்றோருடன் வசித்த ஆயுஷி, பி.சி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சமீபத்தில் சில நாட்கள் வெளியே சென்று தங்கிய அவர் வீடு திரும்பி வந்தபோது, தான் விரும்பிய வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.