விற்காத லாட்டரியில் 1 கோடி பரிசு கேரளா லாட்டரி ஏஜெண்ட்க்கு அடித்த ஜாக்பாட்

கோழிக்கோடு, அக் 10-
கேரளாவைச் சேர்ந்த ஒரு லாட்டரி ஏஜென்ட் தன்னிடம் விற்கப்படாமல் இருந்த சில லாட்டரியில், அம்மாநில அரசின் 50 50 லாட்டரி-யின் வெற்றி எண்ணாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் லாட்டரி ஏஜென்ட் சுமார் 1 கோடி ரூபாய் வரையிலான தொகையை வென்றுள்ளார். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்ட ஒரு விஷயமாக இருந்தாலும், தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா-வில் தொடர்ந்து விற்கப்பட்டு வருகிறது. மேலும் கேரளாவில் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் லாட்டரி வாங்குவதை ஒரு வழக்கமாகவே வைத்துள்ளனர். கோழிக்கோடு பகுதியை சேர்ந்த என்.கே.கங்காதரன் என்பவர் லாட்டரி ஏஜென்ட் ஆக உள்ளார். கேரள மாநில அரசின் 50 50 லாட்டரியின் வெற்றி எண் அறிவிக்கப்பட்ட பின்பு தன்னிடம் விற்கப்படாமல் இருக்கும் லாட்டரியை செக் செய்ய துவங்கினார். சற்றும் எதிர்பார்க்காத வகையில் வெற்றிச் சீட்டு இருப்பதைக் கண்டுபிடித்தார். கங்காதரன் ஒரு லாட்டரி ஏஜெண்ட் என்பதால் தன்னிடம் இருக்கும் லாட்டரி திருடப்படுமோ என்று பயந்து வெற்றிப்பெற்றதை யாருக்கும் தெரிவிக்காமல் அமைதியாக எவ்விதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நேரடியாக வங்கியில் ஒப்படைத்தார். கங்காதரன் 33 ஆண்டுகளாக பஸ் கண்டக்டராக பணியாற்றியவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் லாட்டரி கடை திறந்தார். இவருடைய கடைக்கு பரிசு கிடைப்பது இதுவே முதல் முறையாகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இவருடைய கடையில் லாட்டரி வாங்கியவர்களில் ஆறு பேருக்கு தலா ரூ.5,000 பரிசு வென்றுள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்பும் கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்பட்ட திருவோணம் பம்பர் லாட்டரியில் முதல் பரிசான ரூ.25 கோடியை கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரை சேர்ந்த நடராஜன் என்பவர் தட்டிச் சென்றுள்ளார். ஒரு லாட்டரி சீட்டின் ரூ.500 ஆகும். மொத்தம் 75.76 லட்சம் லாட்டரிகள் விற்பனை செய்யப்பட்டன.