விவசாயிக்கு அனுமதி மறுப்பு: மெட்ரோ நிர்வாகம், அரசுக்கு நோட்டீஸ்

பெங்களூரு,பிப். 29: ராஜாஜிநகர் மெட்ரோ நிலையத்திற்குள் அழுக்கு துணி அணிந்த விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு விளக்கம் கேட்டு மெட்ரோ நிர்வாகம், மாநில அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மெட்ரோ நிலையத்தில் விவசாயிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பற்றி தேசிய மனித உரிமைகள் ஆணையம் சுயமாக‌ புகார் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மனித உரிமைகள் பற்றிய தெளிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.
ராஜாஜிநகர் மெட்ரோ நிலையத்தில் கடந்த திங்கட்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது. மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அழுக்கு துணி அணிந்து வந்த விவசாயி ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் விவாதத்திற்கு காரணமாக அமைந்த‌து.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பான புகாரை பதிந்து, மெட்ரோ நிர்வாக‌த்திற்கு நான்கு வாரங்களில் நிகழ்வு குறித்து அறிக்கை வழங்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
விவசாயி டிக்கெட் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால், அவரை மெட்ரோ ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று மெட்ரோ ரயில் கழகத்தின் மூத்த அதிகாரி ஷங்கர் அவர்கள் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்தார்.
இறுதி அறிக்கை இன்னும் எங்களுகு வரவில்லை. அது வந்த பிறகுதான் அந்த வழக்கு பற்றிய முழுமையான தகவல் தெரியவரும் என்றார்.