விவேகானந்தர் பாறையில் மோடி: குமரி கடலில் 3 நாள் தொடர் தியானம்

நாகர்கோவில்: மே 30:
கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் 3 நாட்கள் தவமிருந்த பாறையில் பிரதமர் மோடி இன்றுமுதல் 3 நாட்கள், 45 மணி நேரத்துக்கு தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார். இதையொட்டி, 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்களவை இறுதிகட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன, மக்களவை தேர்தல் முடியும் நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக, 45 மணி நேரம் தியானம் செய்ய உள்ளார்.
142 ஆண்டுகளுக்கு முன்பு.. கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறை, அன்னை பகவதியம்மன் ஒற்றைக்காலில் தவமிருந்த இடம் ஆகும். அம்மனின் பாதச்சுவடு தற்போதும் அங்கு உள்ளது. இங்கு கடந்த 1882-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 3 நாட்கள் சுவாமி விவேகானந்தர் தவம் இருந்தார். விவேகானந்தரின் ஆன்மிக வாழ்க்கையில் இதுவே முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இந்த பாறையில்தான் விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தியானம் செய்ய வசதியாக அங்கு தியானக்கூடம் அமைந்துள்ளது. இங்கு பிரதமர் தியானம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று மாலை 3.55 மணிக்கு வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு 4.35 மணி அளவில் வருகிறார். கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பிறகு, மாலை 5.30 மணி அளவில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறைக்கு படகில் செல்கிறார். விவேகானந்தர் பாறைக்கு செல்லும் வழியில், அங்குள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள், 45 மணி நேரம்: விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி ஜூன் 1-ம் தேதி மாலைவரை, தொடர்ந்து 45 மணி நேரத்துக்கு மேல் தியானம் மேற்கொள்கிறார். ஜூன் 1-ம் தேதி மாலை 3 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், தியானக் கூடத்தில் இருந்து வெளியே வருகிறார். பிறகு, மாலை 3.30 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்துஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லி திரும்புகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிந்ததும் உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, இமயமலையில் கேதார்நாத் குகையில், மின்வசதி இல்லாத அறையில் காவி உடையுடன் தியானம் மேற்கொண்டார். இந்த நிலையில், தற்போது நாட்டின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருநெல்வேலி சரகடிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில், 8 எஸ்.பி.க்கள் அடங்கிய 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் கன்னியாகுமரியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். கடற்படையினர், கடலோர காவல் படையினரும் தொடர்ந்து ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற் றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்லவும் இன்று முதல்3 நாட்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக் கான படகு சேவையும் நேற்றுபகல் 12 மணியில் இருந்து ரத்துசெய்யப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இளநீர், பழச்சாறு மட்டுமே உணவு: பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய உள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்வார். விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமருக்காக சிறப்பு வசதிகள் எதுவும் செய்ய வேண்டாம். தற்போது இருக்கும் குறைந்தபட்ச வசதிகளுடனேயே தியானம் மேற்கொள்ள பிரதமர் விரும்புகிறார் என்று விவேகானந்த கேந்திரா பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களும், பாதுகாப்பு படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள்.