சென்னை, செப்டம்பர் 23: மதுரை சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடனை லைக்கா நிறுவனம் திருப்பிக்கொடுத்தது. அதற்கு பதில், பணத்தை திருப்பித்தரும் வரை, விஷால் தயாரிக்கும் திரைப்படங்களை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி, தான் தயாரித்த வீரமே வாகை சூடும் என்ற திரைப்படத்தை லைக்கா நிறுவனத்துக்கு வழங்காததால், விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் லைக்கா வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘விஷால் ரூ.15 கோடியை ஐகோர்ட்டு கணக்கில் செலுத்த வேண்டும். அவரது சொத்து கணக்கையும், வங்கி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட டிவிசன் பெஞ்சு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தது மட்டுமல்லாமல், ரூ.15 கோடி டெபாசிட் செலுத்தாவிட்டால், தனி நீதிபதி முன்பு உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை வெளியிட இடைக்கால தடையும் விதித்தது.அதன்பின்னர், லைக்கா தொடர்ந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து கணக்கையும், வங்கி கணக்கு விவரங்களையும் 19-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, ‘விஷால் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்த ஐகோர்ட்டு மீதான மரியாதையை நானே தாழ்த்திவிட்டதாகிவிடும்’ என்று கூறினார். விஷால் தரப்பு வக்கீல், ‘விஷால் பெயரில் 3 கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் உள்ளன. 2 வங்கி கணக்குகளின் ஆவணங்கள், வீட்டுக்கடன் தொடர்பான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தந்தையின் கிரானைட் தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தின் காரணமாக அவரது வீட்டுக்கடனையயும் விஷால் செலுத்திவருகிறார்’ என்று கூறினார். ஆஜராக விலக்கு மேலும், தொடர்ந்து 28 நாட்கள் படப்பிடிப்பு உள்ளதால், விஷால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதையடுத்து, விசாரணையை வருகிற 25-ந் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, நேரில் ஆஜராக விஷாலுக்கு விலக்கு அளித்தார். மேலும், ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். செய்யப்பட்ட விவரங்களை அன்று தாக்கல் செய்ய வேண்டும்.அன்று அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டார்.