விஸ்வகர்மா திட்டம் தொடக்கம்

புதுடெல்லி: அக். 18: தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தில் பயன்பெற இதுவரை 9 ஆயிரத்து 246 பயனாளிகள் பதிவு செய்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர்.
நேற்று(17.10.2023) வரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 3676 பேரும், ஈரோடு மாவட்டத்தில் 1025 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1506 பேரும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 896 பேரும் பதிவு செய்துள்ளனர். இதேபோல், நீலகரி மாவட்டத்தில் 187 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 895பேரும், விருதுநகர் மாவட்டத்தில் 1061 பேரும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டத்தில் பயனடைய தேர்வு செய்யப்படுவதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும். மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இத்திட்டம் கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கிவைக்கப்பட்டது. 18 வகையான பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், திறன் மேம்பாட்டு அமைச்சகம், நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.