விஸ்வ இந்து பரிஷத் தகவல்

அயோத்தி: ஜன. 31
உத்தரபிரதேசத்தின் காசி, மதுரா விவகாரங்களில் இப்போதைக்கு தலையிடப் போவதில்லை என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) தேசிய செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறியுள்ளார். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:
சுமார் 34 வருடங்களாக விஎச்பியில் தொண்டாற்றும் நீங்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை எப்படி உணர்கிறீர்கள்? இந்த ராமர் கோயில் ஒரு தேசியக் கோயில். பகவான் ராமர் நம் அனைவரையும் ஒன்று சேர்த்துள்ளார். இதன் காரணமாக, நம் நாடு எல்லா சுகமும் பெற்று பிரகாசமாக ஒளிரும். இந்தக் கோயில் நமது நம்பிக்கையின் கேந்திரம்.ஒரு நீண்ட கால போராட்டம் முடிவுக்கு வந்து, இன்று அதன் நோக்கம் நிறைவேறி உள்ளது.
ராமர் கோயில் பணியை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட அறக்கட்டளை செய்யும்போது, விஎச்பியின் தலையீடு ஏன்? ராமர் கோயிலுக்காக விஎச்பிதான் போராடியது, பொதுமக்கள் இடையே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. உச்ச நீதிமன்றதீர்ப்பின்படி அமைக்கப்பட்ட அறக்கட்டளையில் விஎச்பி.யின் பங்கு ஒன்றுமில்லை. நேரடியாகத் தலையிடுவதும் கிடையாது. கோயில் பணிக்காக வரும் தொழிலாளர்களுக்கும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கும் உணவு, உறைவிட உதவி மட்டுமே செய்கிறது.கோயில் திறப்பு விழாவை வைத்து உங்கள் தோழமை அமைப்பான பாஜக அரசியல் செய்வதாகஎழுந்துள்ள புகார் குறித்து தங்கள் கருத்து என்ன? பாஜக தனது தேர்தல் அறிக்கையில் ராமர் கோயிலை கட்டுவோம் என வாக்குறுதி அளித்து வந்தது. இது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நிறைவேறினால் உத்தமம் எனக் கருதியது.அதேசமயம், சட்டத்தை மீறுவோம் என்று பாஜக எங்கும் இதுவரை கூறவில்லை. பாஜக, நமது சமூகத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில்தான் ராமர் கோயிலுக்காகக் குரல் கொடுத்து வந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக நீதிமன்றமே அனுமதி அளித்து விட்டது. இதன் தாக்கம், ராமர் கோயிலுக்கு குரல் கொடுத்த கட்சி பாஜக என்பதால் அதன் மீது விழுவது இயற்கையே. ராமர் கோயிலை வைத்து அரசியல் என்பது பாஜக மீதான தவறானப் புகாரே தவிர வேறொன்றும் இல்லை.