வீடுகளில் வீணாகும் உணவு மூலம் 100 கோடி மக்களின் பசியை தீர்க்கலாம்

புதுடெல்லி, மார்ச் 30- உலகளாவிய உணவு விரயம் தொடர்பான அறிக்கையை ஐநா வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் 5-ல் 1 பங்கு அளவில் உணவு விரயமானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் 63 கோடி டன், உணவகங்களில் 29 கோடி டன், சில்லறை கடைகளில் 13 கோடி டன் என உலக அளவில் 105 கோடி டன் உணவு விரயம் செய்யப்படுகிறது. வீடுகளில் ஒரு நாளைக்கு 100 கோடி உணவுகள் வீணாக்கப்படுகின்றன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, உலக அளவில் வீடுகளில் ஒரு நாள் வீணாகும் உணவைக் கொண்டு 100 கோடி மக்களின் பசியைத் தீர்க்க முடியும். குறிப்பாக, அதிக வெப்ப நிலை நிலவும் நாடுகளில் உள்ள வீடுகளில் தனிநபர் உணவு விரயம் அதிகமாக உள்ளது. அதிக வெப்ப நிலையால், உணவை சேமித்து வைப்பது அங்கு சவாலாக உள்ளதால் விரயம் அதிகம் நிகழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஐநாவின் சுற்றுச்சூழல் திட்டப் பிரிவின் செயல் இயக்குநர் ஆண்டர்சன் கூறுகையில், “உணவுவிரயம் என்பது உலக அளவில் நிகழ்ந்து வரும் துயரமான விஷயம்.லட்சக்கணக்கான மக்கள் உணவின்றிபசியில் வாடும் சூழலில், உணவுகள்எந்தக் கணக்குமின்றி வீணாக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்தும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் ஆறுதலான விஷயம், நாடுகள் நினைத்தால் உணவு விரயத்தை கட்டுப்படுத்த முடியும்.
எனவே, உலக நாடுகள் உணவு விரயத்தை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.