வீடுகள், ஓட்டல்களை இடிக்க முடிவு

சமோலி, ஜன. 10- வடஇந்தியாவில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது அமைந்து உள்ளது. இமயமலையையொட்டி அமைந்த புனித நகரம் எனப்படும் இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது. இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை கொண்டுள்ளது. இந்த சூழலில், கடந்த 15 நாட்களாக, வரலாற்று சிறப்பு மிக்க ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களில் திடீர், திடீரென விரிசல் விட தொடங்கியது. இதுதவிர, தரை பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு, பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் உறைய செய்தது. தொடர்ந்து ஜோஷிமத் கோவிலிலும் பெரிய அளவில் விரிசல்கள் விட்டு உள்ளன. ஜோதிர்மடம் மற்றும் சங்கராச்சார்யா மடத்திலும் சமீப நாட்களாக அடுத்தடுத்து விரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதேபோன்று அந்த நகரின் மார்வாரி பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் மீது, கோவில் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. நில பகுதியும் பூமிக்குள் மூழ்கிய சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், அவசரகால நிலையை உணர்ந்த அரசும் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து, மக்களை மீட்டு, நகராட்சி கட்டிடங்கள், குருத்வாராக்கள் மற்றும் பள்ளி கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் அவர்களை கொண்டு சென்று தங்க வைத்து உள்ளனர். இந்த சூழலில், ஜோஷிமத் பகுதியில் நில பகுதிகள் மூழ்கி வருவது போன்று, கர்ணபிரயாக் நகராட்சி பகுதிகளில் பகுகுணா நகரில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. இதுபற்றி சிதார்கஞ்ச் தொகுதி எம்.எல்.ஏ. சவுரப் பகுகுணா கூறும்போது, ஜோஷிமத் நகருக்கு அருகேயுள்ள கிராமங்களில் இதேபோன்ற நிலை காணப்படுகிறது என கூறியுள்ளார். மக்கள் தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு வருகின்றனர். மக்களின் பாதுகாப்புக்கு நாங்கள் உறுதி அளிக்கிறோம் என எம்.எல்.ஏ. கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஜோஷிமத் நகரில் அதிக அளவில் விரிசல் விட்ட மலாரி இன், மவுண்ட் வியூ உள்ளிட்ட ஓட்டல்கள் மற்றும் வீடுகளை இன்று இடிப்பது என்று அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்காக ரூர்கி நகரில் இருந்து மத்திய கட்டிட ஆய்வு மையத்தின் நிபுணர்கள் குழு தலைமையில் மேற்பார்வை பணி நடைபெறும். கட்டிட இடிப்பு பணியில் அரசு நிர்வாகத்திற்கு உதவுவதற்காக தேசிய பேரிடர் பொறுப்பு படையினரும் தயாராக உள்ளனர்.
இதேபோன்று மத்திய உள்துறை அமைச்சக குழு ஒன்றும் ஜோஷிமத் நகருக்கு இன்று வருகை தரவுள்ளது. பாதுகாப்பற்ற மண்டல பகுதிகள் என நிர்வாகம் அறிவித்து, அந்த பகுதி கட்டிடங்கள் இடித்து தள்ளப்படும். கட்டிடங்கள் காலி செய்யப்பட்டு, அப்பகுதி மக்களும் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டனர். இதன்படி ஜோஷிமத் நகரில் மொத்தம் 678 கட்டிடங்களில் விரிசல் கண்டறியப்பட்டு உள்ளன. மொத்தம் 81 குடும்பங்கள் தற்காலிக புலம்பெயர்வு செய்யப்பட்டு உள்ளன. அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகள் போன்ற நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன.