வீடு இன்றி தவிக்கும் 2 லட்சம் மக்கள்

காத்மாண்டு: நவ.6- நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 2 லட்சம் பேர் வீடின்றி பரிதவிக்கின்றனர். அவர்கள் கடும் குளிரில் திறந்தவெளியில் தூங்குகின்றனர்.
நேபாளத்தின் கர்னாலி மாகாணம் ஜாஜர்கோட் பகுதியில் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இரு மாவட்டங்களிலும் பெரும்பாலான வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளன.
நிலநடுக்கம் நேரிட்ட பகுதிகளில் இதுவரை 159 முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டு உள்ளன. இதனால் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு செல்ல மக்கள் அஞ்சுகின்றனர். சுமார் 2 லட்சம் பேர் வீடு, உடைமைகளை இழந்து திறந்தவெளியில் பரிதவிக்கின்றனர். நேபாளத்தில் குளிர் காலம் தொடங்கியுள்ளது. கடும் குளிரை பொருட்படுத்தாமல் கடந்த சனிக்கிழமை ஜாஜர்கோட், கிழக்கு ரூகம் மாவட்ட மக்கள் திறந்தவெளியில் தூங்கினர்.
வீடுகளை இழந்த மக்களுக்காக நேபாள அரசு சார்பில் ஆங்காங்கே தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் இவை போதுமானதாக இல்லை. இதுதொடர்பாக ஜாஜர்கோட் மாவட்டம் பெரி பகுதியைச் சேர்ந்த ஊர்மிளா ராவத் கூறும்போது, “நிலநடுக் கத்தால் எங்களது குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.வீடு, உடைமைகளை முழுமையாக இழந்துவிட்டேன். இப்போது ஆதரவின்றி தெருவில் நிற்கிறேன். தூங்குவதற்குகூட இடமில்லை” என்றார்.