வீட்டிலிருந்தே வாக்களிக்க டெல்லியில் ஏற்பாடு

டெல்லி, மே 18- டெல்லியின் ஏழு மக்களவை தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்கு செலுத்த முதன்முறையாக டெல்லி மக்களவைத் தேர்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களில் 5, 472 பேர் 12டி படிவத்தைப் பூர்த்தி செய்துள்ளனர். இவர்கள் வரும் மே 24-ம் தேதி வரை வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம். வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் காவலர் வீடு தேடி வந்து வாக்குகளைப் பெறவிருக்கும் நாள் உள்ளிட்ட தகவல்கள் முன்கூட்டியே வாக்காளருக்கு முறைப்படி தெரிவிக்கப்படும். வீட்டிலிருந்து வாக்களித்தாலும் யாருக்கு வாக்களித்தோம் என்கிற ரகசியத்தைக் காக்கும் பொறுப்புடன் வாக்குச்சாவடி அதிகாரிகளும் காவலர்களும் செயல்படுவார்கள் என்கிற உறுதி அளிக்கப்படுகிறது.ஒருவேளை இந்த வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு நேரில் வந்து வாக்கு செலுத்த விரும்பினால் 8,000 தன்னார்வலர்கள் மற்றும் 4,000 சக்கர நாற்காலிகள் அவர்களுக்கு உதவிட உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டது. டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி பி.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் பங்கேற்று தங்களது வாக்கை செலுத்த வேண்டும் என்பதே இந்த ஏற்பாட்டின் குறிக்கோளாகும். அதிலும் முதியோர், மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதன் மூலம் அவர்கள் மீது நாங்கள் கொண்டிருக்கும் அக்கறை மற்றும் மரியாதையை வெளிப்படுத்துகிறோம்” என்றார்.