வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 அதிரடியாக குறைப்பு

புதுடெல்லி,ஆக.29-
வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ. 200 குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், “வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பயன்படுத்தும் அனைத்துப் பயனாளிகளும் பயன் பெறும் வகையில் சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைக்க பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்துள்ளார். ஓணம் மற்றும் ரக்ஷா பந்தனை முன்னிட்டு நமது நாட்டின் பெண்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு இது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் தற்போது 9.6 கோடிபயனாளிகள் உள்ளனர். மேலும், 75 லட்சம் பயனாளிகளைச் சேர்க்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஏற்கனவே ரூ. 200 ரூபாய் குறைவாக சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது. அவர்களுக்கு தற்போது மேலும், ரூ. 200 குறையும். அந்த வகையில், பிரதமரின் உஜ்வாலா திட்ட சிலிண்டர் பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு ரூ. 400 குறையும்” என தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது 14.5 கோடி குடிமக்களுக்கு மட்டுமே வீட்டுவசதி எல்பிஜி இணைப்புகள் இருந்தன.இப்போது அந்த எண்ணிக்கை 33 கோடியாக உயர்ந்துள்ளது என்றும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, சமையல் எரிவாயு விலையை குறைக்கும் முடிவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்ததாக பாஜக தலைவர் ஜேபி நட்டா தெரிவித்தார்.
உஜ்வாலா பயனாளிகளுக்கு 700க்கும், மற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சிலிண்டருக்கு 900க்கும் எல்பிஜி கிடைக்கும். ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பெண் சக்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசு.இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 33 கோடி வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்றார்