வீட்டு வாடகை வசூலிப்பதில் அண்ணன்-தம்பி மோதல்: இரண்டு பேர் கொலை


சிக்கபல்லாப்பூர், ஏப். 8- வீட்டு வாடகையை வசூலிக்கும் விவகாரத்தில் ஏற்பட்ட அண்ணன்-தம்பி மோதலில் தம்பியும், அவரின் வளர்ப்பு மகனும் படுகொலை ஆனார்கள்.
அண்ணன் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் பற்றி தெரிய வந்திருப்பதாவது-
சிக்பல்லாபூர் மாவட்டம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் அஸ்வத் நாராயணா (60). இவரது தம்பி ஆஞ்சினப்பா, (55). இவர்களுக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு விட்டிருந்தனர். அண்ணனான அஸ்வத் நாராயணா மட்டுமே வீட்டு வாடகையை வசூலித்து எடுத்துக் கொண்டதாக தெரிய வந்துள்ளது.
இதனை தம்பி ஆஞ்சினப்பா கேட்டதற்கு தகராறு ஏற்பட்டது. இதனால் கத்தியால் ஆஞ்சினப்பாவை தாக்கினார். இதனை பார்த்த ஆஞ்சினப்பாவின் வளர்ப்பு மகன் வாஷ்ணு (17)தந்தையை காப்பாற்ற சென்றார். அவருக்கும் பலமாக கழுத்தில் வெட்டு விழுந்தது.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஆஞ்சினப்பா, விஷ்ணு இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அஸ்வத் நாராயணாவுக்கும் படுகாயம் ஏற்பட்டது. இவரை சிகிச்சைக்காக பெங்களூர் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.