வீட்டு வேலைக்கு ஆள் வைப்பதில் கட்டுப்பாடு

பெங்களூர், செப். 20- கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் எல்லாம் வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள் தங்களுடைய வீடுகளில் சமையல் மற்றும் பிற வேலைகளுக்காக வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு வீட்டு வேலை செய்பவர்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடக மாநில அரசு ஒரு புதிய மசோதாவை கொண்டு வர இருக்கிறது. கர்நாடக மாநில அரசு வீட்டு வேலை செய்பவர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் நலன் மசோதா என்ற பெயரில் ஒரு புதிய மசோதாவை கொண்டுவர முடிவு செய்திருக்கிறது. இதன் மூலம் வீட்டு வேலைகளில் ஈடுபவர்களுக்கு ஒரு குறைந்தபட்ச சம்பளம் கிடைப்பது உறுதி செய்யப்படும் . இது தவிர அவர்களுக்கு பல்வேறு நலன்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதன்படி சமையல் வேலை செய்பவர்கள், வீட்டில் உதவியாளர்களாக வேலை செய்பவர்கள் ,ஓட்டுநர்களாக இருப்பவர்கள் , வயதானவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்களை பார்த்து கொள்பவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின்படி வீட்டு வேலை செய்பவர்கள் பிரிவின் கீழ் வருவார்களாம் . எனவே இவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடிய நபர்கள் அரசாங்கத்திடம் அதனை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்காக தனியாக ஒரு வாரியத்தையே கர்நாடக மாநில அரசு அமைக்க இருக்கிறது. இந்த வாரியத்தில் வீட்டு உரிமையாளர்கள் இப்படிப்பட்ட நபர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் யாரை வேலைக்கு சேர்த்து இருக்கிறார்களோ அவர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்வது அவசியம் . இந்த நல வாரியம் இவர்களுக்கான உரிமைகளை பாதுகாப்பது முறையாக சம்பளம் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த வாரியத்தில் மாநில அரசு அதிகாரிகள் ,வீட்டு வேலை செய்பவர்களுக்கான யூனியனை சேர்ந்தவர்கள் மற்றும் மக்கள் நலப் பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.