வீட்டை இடித்து தரைமட்டமாக்கிய மர்மகும்பல்: கைது செய்யக்கோரி தர்ணா

தருமபுரி,அக்.18-
தருமபுரி அடுத்த இண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பன்னீர்செல்வம்(66) ஆவார். இவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு ஒன்று கடந்த சில வாரங்களாக கட்டி வருகிறார். இந்த நிலையில் இன்று விடியற்காலை 50-பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று ஜேசிபி வாகனம் மூலம், பன்னீர்செல்வம் கட்டி வரும் புதிய வீட்டினை இடித்து தரைமட்டமாக்கியதுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒய்வு பெற்ற அரசு ஊழியர் தனது குடும்பத்துடன், தரைமட்டமாக்கிய வீட்டின் முன்பு அமர்ந்து, இச்சம்பவத்திற்கு காரணமான மர்ம கும்பலை கைது செய்யக்கோரியும், உரிய இழப்பீடு பெற்றுத்தரக்கோரியும் தர்ணா போராட்டம் நடத்தினார். மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த இண்டூர் போலீசார், மர்ம கும்பலால் இடிக்கப்பட்டு தரைமட்டமான வீட்டை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட பன்னீர்செல்வத்திடம் புகாரை பெற்றுக் கொண்ட இண்டூர் போலீசார், வீடு இடிப்புக்கு காரணமான மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். மர்ம கும்பலால் பட்டபகலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டை ஜெசிபி வாகனம் மூலம் இடித்து தரைமாட்டமாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.