வீட்டை எழுதி தருமாறு வளர்ப்பு மகன் கழுத்தில் கத்தியை வைத்தவருக்கு வலை

சேலம், அக்.18-
சேலத்தில் வீட்டை எழுதி தருமாறு வளர்ப்பு மகனின் கழுத்தில் கத்தியை வைத்து திருநங்கையை மிரட்டிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே உள்ள கார்கானா பகுதியை சேர்ந்தவர் திருநங்கை கண்ணகி (வயது 36) . இவர் ராகுல் (13) என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இவன் தனியார் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்தநிலையில் கண்ணகியும், சேலம் லைன்மேட்டை சேர்ந்த அப்சல் முபாரக் (32) என்பவரும் காதலித்தனர். அப்சல் முபாரக் சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு அவர்கள் கூத்தாண்டவர் திருவிழாவின் போது திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் கண்ணகிக்கு சொந்தமான ரூ.30 லட்சம் மதிப்பிலான வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இந்த வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கண்ணகியை, அப்சல் முபாரக் அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். மேலும் கண்ணகியையும், ராகுலையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்தார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அப்சல் முபாரக், சிறுவன் ராகுலை தாக்கியதுடன் அவனுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கண்ணகியிடம் வீட்டை எழுதி தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஆதாரத்துடன் திருநங்கை கண்ணகி தனது கணவர் மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அப்சல் முபாரக் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.