வெங்காயம் மானிய விலையில் விற்பனை

புதுடெல்லி,ஆக 21-
தக்காளியைத் தொடர்ந்து இன்று (திங்கள்கிழமை) முதல் தலைநகர் டெல்லியில் வெங்காயத்தை மானிய விலையில் விற்கவுள்ளதாக தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் காப்பு இருப்பில் (பஃபர் ஸ்டாக்) இருந்து பெரிய வெங்காயத்தை கிலோ ரூ.25-க்கு விற்பதாக அறிவித்துள்ளது.
ஏற்கெனவே தக்காளியை மானிய விலையில் மத்திய அரசு விற்பானை செய்து வருகிறது. சமையலில் அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை கட்டுக்குள் வைத்துக்குள் அரசாங்கம் 2023 – 24 நிதியாண்டில் காப்பு இருப்பு வெங்காயத்தின் அளவை 3 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. மேலும் இன்னும் 2 லட்சம் டன் வெங்காயத்தை இந்த ஆண்டில் கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் அனீஷ் ஜோசப் சந்திரா கூறுகையில், “ஆரம்பகட்டமாக நாங்கள் டெல்லியில் காப்பு இருப்பு வெங்காயத்தை சில்லறை விற்பனைக்குக் கொண்டு வருகிறோம். நடமாடும் வாகனங்கள் மூலம் வெங்காயத்தை கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்யவுள்ளோம். டெல்லியில் இன்று (திங்கள்) முதல் 10 நடமாடும் வேன்கள் மூலம் விற்பனை தொடங்கும். இது படிப்படியாக அதிகரிக்கப்படும். அதுதவிர ஓஎன்டிசி வாயிலாக ஆன்லைனில் வெங்காய விற்பனைக்கான சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
சில்லறை விற்பனையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் டெல்லி, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் அசாமில் சந்தை தலையீடு தேவைப்படுகிறது என அரசாங்கம் கணித்துள்ளது. இந்த ஐந்து மாநிலங்களிலும் வெங்காய விற்பனை சீராக இருப்பதை உறுதி செய்ய காப்பு இருப்பில் இருந்து வெங்காயம் மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தைக்கு அனுப்பப்படுகிறது.
மொத்த விற்பனை சந்தைக்கு காப்பு இருப்பு வெங்காயம் சந்தை விலைக்கும், சில்லறை விற்பனையகங்களுக்கு மானியத்துடன் கிலோ ரூ.25 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது” என்றார். அரசாங்க புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் சராசரியாக வெங்காய விலை 19 சதவீதம் அதிகரித்துள்ளது.