வெடிகுண்டு வைத்தவரை அடையாளம் கண்டுள்ளோம்: அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

பெங்களூரு, மார்ச் 11- ராமேஸ்வரம் ஒயிட்பீல்டு புரூக்பீல்டில் உள்ள ஓட்டலில் வெடிகுண்டு வைத்தவர் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் டாக்டர்ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வெடிகுண்டு வைத்தவரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை உறுதிப்படுத்தும் பணியில் சிசிபி மற்றும் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மார்ச் 1ஆம் தேதி மதியம் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் காயமடைந்தனர் மற்றும் ஒரு பெண் கண்ணை இழந்தார் என்றார்.
இதனிடையே, அரசியல் சாசன மாற்றம் குறித்து எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர், அரசியல் சாசனத்தை அளித்த அம்பேத்கரை பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். அரசியல் சாசனம் இல்லையென்றால் தான் பிரதமராகியிருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். எனினும் அவ‌ர‌து கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அரசியலமைப்பை மாற்றுவதாக கூறுவதாக தெரிவித்து அதற்கு ஆட்சேபம் தெரிவித்தார்.
எம்.பி அனந்தகுமார் ஹெக்டே இப்படி பலமுறை கூறியிருக்கிறார். ஹெக்டேவின் கருத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். என்றாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது நல்ல வளர்ச்சியல்ல என்றார்.