வெடி விபத்து: இரு அறைகள் தரைமட்டம்

சிவகாசி: மே. 11 – சிவகாசி அருகே நாரணாபுரத்தில் உள்ள மகேஸ்வரி பட்டாசு ஆலையில் இன்று (மே.11) காலை 6:15 மணி அளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு அறைகள் தரைமட்டாயின.
சிவகாசி காத்தநாடார் தெருவை சேர்ந்தவர் ராஜாராம்(47). இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை (பெசோ) உரிமம் பெற்று சிவகாசி அருகே நாரணாபுரத்தில் மகேஸ்வரி பயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 42 அறைகளில் பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யபடுகிறது.
இந்நிலையில் இன்று காலை 6:15 மணி அளவில் பட்டாசு ஆலையில் வெடி மருந்து இருப்பு வைத்திருக்கும் அறையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் வெடி பொருட்கள் இருப்பு வைத்திருந்த இரு அறைகள் இடிந்து தரைமட்டமாயின. அதிகாலை நேரத்தில் தொழிலாளர்கள் பணிக்கு வருவதற்கு முன் வெடி விபத்து நடந்ததால் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
நேற்று பட்டாசு உற்பத்தி முடிந்து, மீதமிருந்த மணி மருந்தை இருப்பு வைத்து உள்ளனர். அதில் ஏற்பட்ட வேதியியல் மாற்றம் காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.