வெயில் கொடுமை -பெங்களூர் வானில் இருந்து சுருண்டு விழும் பறவைகள்

பெங்களூர் : ஏப்.30:
கோடை வெயிலில் கொடூர வெப்பம் மற்றும் அனல் காற்று காரணமாக பெங்களூரில் வானில் பறக்கும் பறவைகளில் சில அவ்வப்போது சுருண்டு விடும் பரிதாப சம்பவம் நடந்து வருகிறது.இதைத் தவிர உஷ்ணம் அதிகமாக இருப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.பாம்புகள் நடமாட்டம் காரணமாக பெங்களூர் வாசிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நகரில் வீசி வரும் உஷணக்காற்றால் பல பகுதிகளில் பாம்புகள் தென்படுவது மற்றும் வானில் இருந்து பறவைகள் கீழே சுருண்டு விழுவது போன்ற அழைப்புகள் கடந்த இரண்டு மாதங்களில் அதிகரித்து விட்ட நிலையில் மாநகராட்சியின் வன விலங்கு பாதுகாப்பு துறை திணறி வருகிறது.தற்போது 7 பேர் கொண்ட ஊழியர்கள் குழு நாளொன்றுக்கு 150க்கும் மேற்பட்ட போன் அழைப்புகளுக்கு பதிலளித்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுகளில் இருந்த 60 போன் அழைப்புகளைவிட மிக அதிகமாகும்.மாநகராட்சியின் வனவிலங்கு மீட்பு தொலைப்பேசி எண் குறித்துமக்களிடையே விழிப்புணர்வு இல்லாததால் பல பாம்புகள் காப்பாற்றமுடியாமல் போய் இறந்து விடுகின்றன. இது குறித்து வனத்துறை அதிகாரி ஸ்வாமி கூறுகையில் நகரில் உஷ்ண நிலை தொடர்ந்து வருவதால் கடந்த இரண்டு மாதங்களாக பாம்புகள் வீட்டுக்குள் புகுந்து விடுவது பறவைகள் வானிலிருந்து சுருண்டு விழுதல் மற்றும் குரங்குகளால் தொல்லைகள் போன்ற புகார்கள் அதிகரித்துள்ளன. அதிக உஷ்ணத்தால் எந்த பாம்பும் இறந்ததாய் பதிவாகவில்லை. விலங்குகளை பாதுகாக்கும் உணர்வு மக்களுக்கு பொதுவாக இருப்பதில்லை. மிருகங்கள் அபாயத்தில் இருப்பது தெரிந்த போதும் அவர்கள் எங்களுக்கு போன் செய்து தகவல் அளிக்காமல் அலட்சியமாய் இருந்துவிடுகின்றனர். தவிர அதிக அளவில் நகரமயமாக்குதலால் பாம்புகளுக்கு தங்கள் உறைவிடங்கள் அழிந்து விட்டன. நகரின் கெங்கேரி , ஆனேக்கல் , மற்றும் புறப்பகுதிகளில் வெயிலின்தாக்கம் அதிகரித்துள்ளதால் பாம்புகள் சுவாசிக்க முடிவதில்லை. இதனால் இவை குளிர்ந்த இடங்கள் நோக்கி வந்து விடுகின்றன என்றார்.