வெயில் தாக்கத்தால் சாங்கி ஏரியில் குறைந்த நீர் மட்டம்

பெங்களூர், மே 1- நகரில் கடந்த சில மாதங்களாக கொளுத்திவரும் வெய்யிலால் நகரின் நீர்நிலைகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அதிலும் குறிப்பாக மழைநீரை மட்டுமே நம்பியுள்ள சாங்க்கி ஏரி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய விஞ்ஞான கழக ஈர நிலங்கள் ஆய்வு துறை உறுப்பினர் டாக்டர் டி வி ராமச்சந்திரன் கூறுகையில் ஏரியில் வெயிலின் தாக்கத்தால் மேல் மட்டத்தில் அதிகளவு தண்ணீர் ஆவியாதல் மற்றும் கடந்த இரண்டு மாதங்களாக நகரில் மழை இல்லாதது ஆகிய இரண்டு முக்கிய காரணங்களால் சாங்க்கி ஏரி தண்ணீர் மட்டம் மிகவும் குறைந்துள்ளது. இந்த நிலைக்கு பல குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளும் காரணமாகியுள்ளது. சாங்க்கி ஏரிக்கு இனியும் தண்ணீர் வரத்து இல்லை. தவிர ஏரியின் சுற்றுப்பகுதியில் உள்ளவர்கள் எண்ணற்ற போர்வெல்கலை தோண்டி இருப்பதால் நிலத்தடி நீர்மட்டமும் மிகவும் குறைந்துள்ளது. ஏரியை சீர்படுத்தும் பெயரில் ஏரியை சுற்றிலும் கான்க்ரீட் கட்டிடங்கள் உருவாகி இருப்பதால் ஏரியின் பசுமை சூழல் மாறிப்போயுள்ளது. தவிர தரை மட்ட நீரூற்றுக்களை ஏரியில் நிறுவ அதிகாரிகள் தயக்கம் காட்டிவருவதால் நீரின் போஷாக்கு தரமும் குறைந்துள்ளது நீரூற்றுக்கள் அமைத்திருந்தால் ஏரியில் பிராணவாயு சீராக பரவியிருக்கும். என்றார். இதே வேளையில் சாங்க்கி எரிக்காக மக்கள் என்ற குழுவை சேர்ந்த ப்ரீத்தி சுந்தர்ராஜன் இது குறித்து கூறுகையில் நாங்கள் சம்மந்தப்பட்ட துறைகளிடம் ஏரியை சுற்றி சிமெண்ட் நடை பாதைகள் அமைத்தது மற்றும் ஏரியை சுற்றி பாக்கு போன்ற கடினமான மரங்களை மாட்டாது குறித்தும் எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். ஆனால் அதிகாரிகள் கர்நாடக ஏரிகள் நிர்வகித்து மற்றும் அபிவிருத்தி வாரியதுடன் கலந்தாலோசித்த பின்னரே நடைபாதைகள் மற்றும் மரங்களை நட்டதாக தெரிவித்தனர். ஆனால் இந்த ஆலோசனைகளில் எந்த சுற்றுசூழல் நிபுணரும் கலந்து கொண்டதாக தெரியவில்லை. என்றார். இது குறித்து மாநகராட்சி ஏரிகள் பிரிவு அதிகாரி இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருப்பதுடன் தவிர அவர் மேலும் கூறுகையில் ஏரிகள் சம்மந்த பட்ட அனைத்து பணிகளும் ஏரிகள் அபிவிருத்தி வாரியத்தின் நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் குடியிருப்புவாசிகளின் ஒப்புதலோடே நடக்கிறது. ஏரியை சுற்றி மிக குறைந்த ளவிலேயே சிமெண்ட் பாதை போடப்பட்டுள்ளது. ஏரியின் நீர் கொள்ளளவை இது எந்த விதத்திலும் பாதிக்காது. தற்போது வற்றி வரும் ஏரியின் நிலைக்கு மழையை எதிர்பார்ப்பதை விட வேறு தீர்வுகள் இல்லை . ஆனால் குடியிருப்புவாசிகள் மற்றும் மாநகராட்சி ஒப்புக்கொண்டால் ஏரியை சுத்திகரிக்கப்பட்ட நீரால் நிரப்ப முடியும். இதற்க்கு ஹெப்பாளில் உள்ள சுத்திகரிப்பு மையத்திலிருந்து டேங்கர்கள் வாயிலாக நீரை கொண்டுவர முடியும். என்றார்.