வெயில் தாக்கம் அதிகரிப்புஅம்மை நோய் பரவும் அபாயம்

சென்னை: மார்ச் 20:
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மை வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மனித உடலின் சராசரி வெப்பநிலை 36.1 C (97 F) முதல் 37.2 C (99 F) ஆகும். சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகமாகும்போது வியர்வை, தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பம் வெளியேறி உடல் சராசரி வெப்பநிலையை தாண்டுகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உப்புச் சத்துப் பற்றாக்குறையும் நீர்ச்சத்துப் பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம்.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தட்டம்மை (Measles), சின்னம்மை (Chicken Pox) போன்ற வெயில் (வெப்பம்) தொடர்பான நோய்கள் அதிக அளவில் தாக்குவதற்கு வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் வெயில் காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறியுறுத்தி உள்ளோம். சென்னையை பொறுத்த வரை சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் வெப்ப செயல் திட்டம் (heat action plan) உருவாக்கி வெயில்தொடர்பான நோய்களை கண்கணிக்க உத்தரவிட்டு உள்ளோம். மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு தேவையான குடிநீர் வைக்கவும், வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்க அறியுறுத்தி உள்ளோம். வெயில் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவரின் முழு தகவல்களை பொதுசுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

  • கேரளாவில் 9 பேர் பலி: கேரளாவில் பிப்ரவரி மாதம் முதலே கடும் வெயில் வாட்டி வருகிறது. பிற்பகல் 3 மணி வரை யாரும் வெளியே வர வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. கடும் வெயில் தாக்கம் காரணமாக கேரள மாநிலத்தில் அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த 75 நாட்களில், மாநிலத்தில் மொத்தம் 6744 பேருக்கு அம்மை நோய் வந்துள்ளது. ஒன்பது பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு, கேரள மாநிலத்தில் 26,000க்கும் மேற்பட்ட அம்மை நோய் பதிவாகியுள்ளது.

பொதுமக்கள் செய்ய வேண்டியவை: பயணத்தின் போது குடிநீர் எடுத்து செல்ல வேண்டும், தேவையான அளவிற்கு தண்ணீர் குடிக்க வேண்டும், செயற்கை குளிர்பானங்களை தவிர்த்து இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகளை குடிக்கலாம். திராட்சை, கிர்ணி பழம், தர்பூசணி பழங்கள் போன்ற நீர் சத்து உள்ள பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை அணிய வேண்டாம்.செய்யக் கூடாதது மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக 64 வயதுக்கு மேல் உள்ள நபர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியில் வருவதை தடுக்க வேண்டும். குளிர்பானங்கள் மற்றும் ஐஸ் தண்ணீரில் உள்ள குளிர்ச்சி, ரத்தக் குழாய்களை சுருக்கி, உடலின் வெப்பத்தை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. ஆகவே கோடையில் ஐஸ் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது. வெயில் காலத்தில் டீ அல்லது காபி அருந்தினால் அசிடிட்டி பிரச்னைகள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை உருவாகும்.