வெற்றிக்கு காங்கிரஸ் வியூகம்

உதய்பூர் (ராஜஸ்தான் ) மே. 13 – அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால் துவண்டு கட்சியின் முந்தைய பேரும் புகழும் இழந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகம் கொடுத்து நாடு முழுக்க கட்சியை ஒருங்கிணைத்து புத்துயிர் கொடுக்க மேற்கொள்ளவேண்டிய செயல் திட்டங்கள் , மற்றும் செயல் முறைகள் குறித்து இன்று முதல் துவங்கியுள்ள மூன்று நாட்கள்நடக்க உள்ள காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முகாமில் ஆலோசனைகள் நடக்க உள்ளன. பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களில் படு தோல்வி , கட்சியின் தேசிய பிரமுகர்களுக்கிடையே உட்கட்சி பூசல்கள் , எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் , மற்றும் கட்சியை மீண்டும் நிலை நிறுத்தும் நோக்கில் காங்கிரஸ் கட்சியின் மூன்று நாட்கள் நடக்கவுள்ள சிந்தனா – மந்தனா கூட்டம் துவங்கியுள்ளது. கட்சியின் தேசிய தலைவர் பதவியை யாருக்கு கொடுப்பது என்பது குறித்து இதற்க்கு முன்னர் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டங்களில் போதுமான அளவிற்கு விவாதங்கள் நடந்துள்ளன. குடும்ப அரசியலுக்கு எதிராக கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சனைகள் எழுப்பினர். இந்த நிலையில் கட்சி தேசிய தலைவர் குறித்து எவ்வித ஒருமித்த ஒப்புதலும் இல்லாமல் சோனியா காந்தியே தலைவராக நீடித்தார் . மூன்று நாட்கள் நடக்க உள்ள சிந்தனை முகாமில் கட்சி தலைவர் தேர்வு விஷயம் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். மீண்டும் தலைவர் பதவியை ராகுல் காந்திக்கு வழங்க வேண்டும் என ஒரு கோஷ்டி வற்புறுத்திவருகிறது . முன் வரும் பாராளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு கட்சியின் அடுத்த தலைவர பொறுப்பை யாருக்கு அளிக்க வேண்டும் என ஆலோசிக்கும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக மூன்று தினங்கள் நடக்க உள்ள இந்த கூட்டத்தில் ஒரு குடும்பம் , ஒரு டிக்கெட் , திட்டம் குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்படும். தவிர வரும் 2024ல் ஆண்டில் நடக்கவுள்ள பொது தேர்தலுக்கு தயாரிப்பு , கர்நாடகா , குஜராத் , ஹிமாச்சல பிரதேசம் , மத்தியபிரதேசம் , சத்தீஸ்கர் , மற்றும் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற இப்போதிருந்தே செயல் திட்டங்களை முடிவு செய்ய சம்மந்தப்பட்ட மாநிலங்களுக்கு கட்சி தலைவி சோனியா காந்தி அறிவுறுத்த உள்ளார். இந்த மாநிலங்களில் தேர்தல் தயாரிப்பு குறித்து பிரமுகர்களிடமிருந்து விவரங்கள் கேட்க உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் முக்கியமாக ஆளும் கட்சியான பாரதீய ஜனதாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துதல் மற்றும் கட்சி ஒருங்கிணைப்பு குறித்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. நாட்டின் பொருளாதார நிலைமை , வேலை இல்லா பிரச்சனை , இளைய சமுதாயம் , மற்றும் விவசாயிகள் சந்தித்துவரும் பிரச்சனைகள் குறித்து தலைவர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். பொதுத்துறைகளில் முதலீடுகள் பின்னடைவு , தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும் நிதி பற்றாக்குறை , சிறுபான்மையினர் பிரச்சனைகள் , புதிய தேசிய கல்வி கொள்கை , என பல விஷயங்கள் குறித்து இந்த மூன்று நாள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இந்த சிந்தனை கூட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் , முன்னாள் முதல்வர் பி எஸ் சித்தராமையா பங்கு கொள்ள இருப்பதுடன் மாநிலத்தின் அரசியல் நிலைமை , எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தயார் நிலை , ராஜ்ய சபா மற்றும் மேலவை தேர்தல்கள் மற்றும் பா ஜ ஆட்சிக்கு எதிராக செயல் திட்டங்கள் அமைப்பது குறித்து கட்சு மேலிட தலைவர்களுக்கு தகவல்கள் அளிக்க உள்ளனர்.