வெற்றி உறுதி: இஸ்ரோ தலைவர் நம்பிக்கைப் பேட்டி

ஸ்ரீஹரிகோட்ட,ஆகஸ்ட் 23
: இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அளித்துள்ள பேட்டியில், சந்திரயான்-3 மிஷனின் வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) ரூ.615 கோடியில் வடிவமைத்தது. எல்விஎம்-3 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 40 நாள் பயணத்துக்கு பிறகு, விண்கலம் தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் வலம் வருகிறது.சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், திட்டமிட்டபடி இன்று மாலை 6 மணி அளவில் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்குகிறது.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் அளித்துள்ள பேட்டியில், சந்திரயான்-3 மிஷனின் வெற்றி நிச்சயம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவருடைய பேட்டியிலிருந்து.. சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கும் பணிகள் எவ்வாறு நடக்கின்றன?

இந்த மிஷன் வெற்றிகரமானதாக இருக்கும் என்பதில் நாங்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த நம்பிக்கை எங்கள் குழுவினர் கடந்த 4 ஆண்டுகளாக செலுத்திய உழைப்பினால் உருவானது. கடந்த 2019-ல் சந்திரயான்-2 நிலவில் தரையிறங்கும்போது மோதி நொறுங்கியதிலிருந்து நாங்கள் சந்திரயான்-3 பணிகளைத் தொடங்கிவிட்டோம்.

4 ஆண்டுகள் உழைப்பு என்பது குறுகிய காலம் அல்ல. அதனால் நாங்கள் சந்திரயான்-3 நிச்சயமாக வெற்றி பெறும் என்று கொண்டுள்ள நம்பிக்கை மிதமிஞ்சிய நம்பிக்கையும் அல்ல. இந்த மிஷனை முன்னெடுத்துச் செல்வதில் சிறுசிறு வாய்ப்புகளையும் கூட மிகக் கவனமாகப் பயன்படுத்தியுள்ளோம். சொல்லப்போனால் பேக் அப் திட்டங்களைக் கூட தயார் செய்திருந்தோம்.