வெளியுறவு துறை வலியுறுத்தல்

புதுடெல்லி: டிசம்பர். 30 – மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 175 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காயம் அடைந்தனர்.
அதன்பிறகு அல்-கய்தா அமைப்புக்கு ஐ.நா அறிவித்த தடை பட்டியலில் சயீத் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஹஃபிஸ் சயீத் பற்றிய தகவல் அளித்தால் 10 மில்லியன் டாலர் வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்காவும் அறிவித்தது. நிதி நடவடிக்கை கண்காணிப்பு படை அமைப்பு (எப்ஏடிஎப்) சர்வதேச தீவிரவாத கருப்பு பட்டியலில், ஹஃபிஸ் சயீத்தை சேர்க்க முயற்சி எடுத்தது. இதை தவிர்க்கும் நடவடிக்கையாக, தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஹஃபிஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.இந்தியா – பாகிஸ்தான் இடையே கைதிகளை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இதனால், ஹஃபிஸ் சயீத்தை நீதிக்கு முன் கொண்டுவர பாகிஸ்தான் அரசு எதுவும் செய்யவில்லை. இந்நிலையில் அவர் மீது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை சந்திக்க, ஹஃபிஸ் சயீத்தை ஒப்படைக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தான் அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளது.