வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாய வீட்டுத்தனிமை: அசாம் அறிவிப்பு


கவுகாத்தி, ஏப். 22- நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் கடுமையாக உள்ளது. கடந்த சில நாட்களாக 2.50- லட்சத்திற்கும் மேல் ஒருநாள் கொரோனா பாதிப்பு இந்தியாவில் பதிவாகி வருகிறது. கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருவதால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
இந்த நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து அசாம் வருபவர்கள் 7 நாட்கள் கட்டாயம் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் தனிமைப்படுத்துதல் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 1,665- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மாநில அரசு நேற்று அறிவித்தது.