வெளி மாநில தமிழர் நலனுக்காக தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள்

பெங்களூரு, ஜூன் 21: வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்களின் நலன்காக்கும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று தமிழக அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் பி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.கர்நாடகத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கைகளை கேட்டறியும் நோக்கில் கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்த கர்நாடகத் தமிழர் சந்திப்புக்கூட்டத்தில் பங்கேற்று, அவர் பேசியது: தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு பிழைப்பு தேடி, நாட்டின் பல மாநிலங்கள், பிற நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையும் அதன் கீழ் இயங்கும் ஆணையரகமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டை கடந்து வாழும் தமிழர்களின் எதிர்பார்ப்புகளை மாநிலங்கள் இடையிலான உறவில் எந்த குழப்பமும், விரிசலும் ஏற்படாமல், சட்டத்திற்கு உட்பட்டு என்னென்ன பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியுமோ அவை செயல்படுத்தப்படும்.
பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ்க் கல்வி, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு, தமிழ்ப்பண்பாடு சார்ந்த விழாக்களுக்கு ஒத்துழைப்பு, நிதியுதவி வழங்குவது உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். குறிப்பாக அயலகத் தமிழர் நலம் மற்றும் மறுவாழ்வுத்துறையில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த தமிழர்கள் உறுப்பினராக சேர வேண்டும். அப்படி சேரும் உறுப்பினர்களுக்கு ரூ.10 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படுகிறது. பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்றவைக்கு நிதியுதவி செய்யப்படுகிறது. இதே சலுகையின் கீழ் விரைவில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தும் யோசனையும் உள்ளது.கர்நாடகத்தில் சிறுதொழில் செய்வோர், சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட தொழில் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தினால், தமிழ்நாட்டு அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு செயல்படுத்த தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தினால் கலை குழுவினர் அனுப்பி வைப்பது உள்பட தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும். தமிழை கற்றுத்தருவது தவிர வெளிமாநிலத்தில் வாழும் தமிழர்களின் நலன்காக்கும் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பயன்களை பெற எங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார். கர்நாடக சுற்றுலாதுறை இயக்குந‌ரும், பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத் தலைவருமான டாக்டர் வி.ராம்பிரசாத் மனோகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை, அனைத்திந்திய தமிழ்ச்சங்கப்பேரவைத்தலைவர் துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.