வெள்ளத்தால் தத்தளிக்கும் சீனா: ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்; 1.20 லட்சம் பேர் வெளியேற்றம்

பீஜிங், அக். 12- சீனாவின் சாங்ஷி மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன; 1.20 லட்சம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
வடக்கு சீனாவின் ஹீபெய் மாகாணத்தில் பெய்த கனமழையால் சிஜியாஜுவாங் என்ற நகரில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அந்த ஆற்றுப் பாலத்தில் கடக்க முயன்ற பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த 51 பயணிகளில் இருவர் உயிரிழந்தனர்; 37 பேர் மீட்கப்பட்டனர். 12 பேரை தேடும் பணி நடக்கிறது. சாங்ஷி மாகாணத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி, ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன. அப்பகுதியில் இருந்து 1.20 லட்சம் பேர் மீட்கப்பட்டனர். 1.90 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.