வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் – 3 பேர் தப்பினர்

கோவை: நவம்பர். 24 – தாளியூர் அருகே தரைப்பாலத்தை கடந்த கார் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. காரில் இருந்த 3 பேர் குதித்து தப்பினர்.கனமழையின் காரணமாக கோவையில் அவிநாசி சாலை அண்ணா மேம்பாலத்தின் கீழ் பகுதி, லங்கா கார்னர் ரயில்வே சுரங்கப் பாதை, வட கோவை மேம்பாலத்தின் கீழ் பகுதி, கிக்கானி பள்ளி ரயில்வே சுரங்கப் பாதை, சோம சுந்தரா மில் ரயில்வே சுரங்கப் பாதை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார் வைத்து தேங்கிய மழைநீரை அகற்றினர்.
வட மதுரை வி.எஸ்.கே நகரைச் சேர்ந்த 3 பேர் ஒரு காரில் சின்ன தடாகம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். தாளியூரில் தரைப் பாலத்தை மூழ்கடித்த படி மழைநீர் கரைபுரண்டு ஓடியது. மழையை பொருட்படுத்தாமல் தரைப் பாலத்தை கடக்க அவர்கள் முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து வெள்ளத்தில் செல்ல தொடங்கியது. உஷாரடைந்த மூவரும் கார் கதவை திறந்து குதித்து வெளியேறினர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார், கணுவாய் பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் சிக்கிக் கொண்டது. அந்த காரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப் பாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் குன்னூர், கோத்தகிரி ஆகிய இரண்டு வழித்தடமும் நேற்று தற்காலிமாக மூடப்பட்டது.
மேட்டுப் பாளையம் பவானி ஆற்றுப் பாலம் பகுதியில், போலீஸார் உதகை நோக்கி சென்ற வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்பினர். பேருந்துகளும் மேட்டுப் பாளையத்திலேயே நேற்று மாலை வரை நிறுத்தி வைக்கப்பட்டன. சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர் பேருந்து சேவை தொடங்கியது.